புதன், ஏப்ரல் 15, 2009

விடியலைத்தேடி......

ஏன் நடக்கிறது என்பது தெரியாமல்
இன்னமும் எதிர்பார்ததுக்கொண்டிருக்கும் மனது
இரைச்சல் போட்ட பறவைகளைக் கண்டு பயந்ததால்
இப்போது இனிய குயில் கூட 
இழவு சொல்வதைப்போலத்தான் உள்ளது.
தப்புச் செய்யாதவர்கள் ஏன் தண்டனை அனுபவிக்கிறார்கள்?
தமிழனாயப் பிறப்பது தப்பென்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் கொண்டாடுங்கள்
அவர்கள் தலையில் இரத்தம் வடிந்தால் என்ன?
நாங்கள் மருத்து நீரை தலையில் வைப்போம்.
நீங்கள் புதுத் துணிகளை கேட்டால் 
வாங்கியனுப்பியிருப்பேன்.
மன்னியுங்கள்
காயத்துக்கு கட்டுப்போடும் துணி
என்னிடம் கைவசம் இல்லை.

நல்லநேரம் எது எனக் கேட்டால் 
தலையில் குண்டுவிழாத நேரம்
என்று நீ சொல்லலாம்.
பொறுத்திரு
நாங்களும் கைவிசேசம் மாறிக்கொள்வோம்.

வீடெல்லாம் செத்தவீடென்றால்
யாருக்கு விருந்து வைப்பது?
நானும் பிரார்த்திக்கின்றேன்
இறந்து போனவல்கள் எழும்பாவிட்டாலும்
இனியாவது நீ இறக்கக் கூடாதென்று

நானும் மாறிவிட்டேன்
எல்லோரையும்போல
எப்போது நல்லநேரம் எனப்
பஞ்சாங்கத்தைப் பார்த்தபடி.

கடவுளே
இனியாவது கண்ணைத்திற.


3 கருத்துகள்:

வேல் சாரங்கன் சொன்னது…

கண் திறக்காத வரை தான் கடவுளுக்கு இங்கு பாதுகாப்பு... எதுக்கு அவனாவது நல்ல இருக்கட்டும் விடுங்க... நல்ல கவிதை...

tharuha சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
tharuha சொன்னது…

கடவுளென்ற சொல்லுக்கு இப்போது அர்த்தம் தேடுகின்றேன் ...வலிக்கிறது ....ஒவ்வொரு உடல் கலன்களும் வலிக்கிறது ..........