திங்கள், டிசம்பர் 28, 2009

ஆறிலொண்டு

படுத்தாத பாடுபட்டு பாஸ் எடுத்து கொழும்பு வந்து
படிச்சாச்சு எண்டு சொல்லப் பாடமில்லை - குடுத்தாச்சு
பத்து வருசமாய் பண்ணியது எல்லாமும்
விடு தாயே என்ரை விதி!

பொலிசு ரிப்போட், போட்டோக் கொப்பி போக வர ஐடிங்காட்
கலிமுற்று இந்நாட்டின் கரைச்சல்களை- தலை நகராய்
இருந்தாய் என்பதனால் இவ்வளவு நாள் நடந்ததுவோ
பொறுக்கேலாதினி நானும் போறன்.

கூச்சல் குடுக்காரன் குறையுடுப்பு அன்ரிமார்
பேச்சு இனிக்காது பெறமாட்டா - வாச்சுமேனாய்
வாய்த்தார் வாய்வைக்கும் வாசல்களை விட்டுவிட்டு
போய்ச்சேர்வதே நல்ல புத்தி!!!


26 12 2009

செவ்வாய், செப்டம்பர் 29, 2009

வாணிவிழா 2009

யாழ் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம் கொழும்பு
வாணிவிழா 2009

மானம்பூ வாழை வெட்டி மர்த்தனியின் தசமியிலே
ஆனபடி பாட்டுரைக்க அடிகொடுப்பாய் - தேனிதழின்
இனிமை சேர்க்கின்ற இசையோடு தமிழ் சொல்லும்
கனிவை கொடுக்கும் கலை

கலைவாணி உந்தனதுகழல்நாடி நின்றதனால்
பலவாறும் நுட்பங்கள் படிப்பித்தாய் - தருவாயே
என்றும் குறையாத இன்பங்கள் எங்களுக்கு
பண்பெணும் குணத்தையும் பார்

வெள்ளைத்தாமரையில் வீற்றிருந்து தமிழ் தந்து
நல்லவற்றைக் காக்கின்ற நாயகியே - வல்லவளே
தோல்விகள் தாங்கும் துணிவை நீ தந்திடுக
ஆள்வது கொடுமை அரசு!!

முப்பெரும் தேவியரும் முறைவைத்து தமிழருக்கு
தப்புற வழியெல்லாம் தந்தருளும் - துப்புரவு
என்ற நிலை விரும்பும் எம்மினத்தை சாக்கடையில்
கொன்று போடாமல் கொணர்!!!!


28 09 2009

திங்கள், ஜூலை 27, 2009

கந்தா நீ கடவுள் !!

கிடைக்காத பழத்திற்காய் சினங்கொண்டு மலையேறி
உடை வெறுத்து நின்றாயே, உன்னிலையில் எஞ்சனங்கள்
கிடைக்காத பலத்திற்கு கீழ்ப்பட்டு நின்றார்கள்
அடைக்காதே உன் கதவை அகதிகளுக்கிடம் வழங்கு!!

கோவப்பட்ட மனிதனுக்கு கோவணந்தான் மிஞ்சுமெனில்
பாவப்பட்ட தமிழனுக்கு பதில் என்ன? ஆதனத்தில்
பங்கு கேட்டதற்கா பரப்பிரமம் பழிவாங்கும்? தீயவற்றை
சங்கர்த்துக் காக்கும் தமிழே நீ எழுந்திடுவாய்!!!

கொடியேற்று குறை விலக்கு கொடியவர்கள் கலங்கிடவும்
அடிபோட்டு விளையாடு, அன்பர்கள் விருப்பங்களை மேல்
படியேற்று மிடி மாற்று பகலிரவு வரும்போகும்
வடிவேலே பயம் மாற்று பக்தர்களுக்கு அருள் கூட்டு!!

27 07 2009

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

வன்முறைதான் என்ரை வழி

கேட்டன் பாருன்னைக் கிளுகிளுப்பாய் இல்லாமல்
மோட்டு வளைபார்த்து முறைக்கிறியே- பாட்டை விட்டு
வெள்ளை வாகனத்தில் விரைந்துன்னைக் கடத்தோணும்
கள்ளியே உன்மனத்தைக் கரை!!

கரையைத் தேடிவந்து கவிழ்ந்து தலைநின்றால்
இரையில் மொய்த்துவிடும் இலையான்கள்- அடிபோடி
மென்மை வெளிப்படுத்தல் விளங்காட்டில் இனிமேலும்
வன்முறைதான் என்ரை வழி!!

கடிதங்கள் எழுதிக் கனவினிலை மனுப்போட்டுத்
தடிமனாய்ப் போச்செனக்கு தலைவலியும்- வடிவழகி
எண்டுநினைப்போ? இரு,பாரன் பல்குழலில்
குண்டுகள் அடிப்பேன் குறி

அகதிபோல் ஓடி அடிவாங்கித் தெருநாயாய்ப்
பகலிலே வதைபட்ட பாடமிது- இனிமேலும்
கேட்டல் மறுத்தல் எனுங்கதைகள் கிடையாது
வேட்டொலி சொல்லும் விடை!!!

கி.குருபரன்.
17.04.2009

புதன், ஏப்ரல் 15, 2009

விடியலைத்தேடி......

ஏன் நடக்கிறது என்பது தெரியாமல்
இன்னமும் எதிர்பார்ததுக்கொண்டிருக்கும் மனது
இரைச்சல் போட்ட பறவைகளைக் கண்டு பயந்ததால்
இப்போது இனிய குயில் கூட 
இழவு சொல்வதைப்போலத்தான் உள்ளது.
தப்புச் செய்யாதவர்கள் ஏன் தண்டனை அனுபவிக்கிறார்கள்?
தமிழனாயப் பிறப்பது தப்பென்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் கொண்டாடுங்கள்
அவர்கள் தலையில் இரத்தம் வடிந்தால் என்ன?
நாங்கள் மருத்து நீரை தலையில் வைப்போம்.
நீங்கள் புதுத் துணிகளை கேட்டால் 
வாங்கியனுப்பியிருப்பேன்.
மன்னியுங்கள்
காயத்துக்கு கட்டுப்போடும் துணி
என்னிடம் கைவசம் இல்லை.

நல்லநேரம் எது எனக் கேட்டால் 
தலையில் குண்டுவிழாத நேரம்
என்று நீ சொல்லலாம்.
பொறுத்திரு
நாங்களும் கைவிசேசம் மாறிக்கொள்வோம்.

வீடெல்லாம் செத்தவீடென்றால்
யாருக்கு விருந்து வைப்பது?
நானும் பிரார்த்திக்கின்றேன்
இறந்து போனவல்கள் எழும்பாவிட்டாலும்
இனியாவது நீ இறக்கக் கூடாதென்று

நானும் மாறிவிட்டேன்
எல்லோரையும்போல
எப்போது நல்லநேரம் எனப்
பஞ்சாங்கத்தைப் பார்த்தபடி.

கடவுளே
இனியாவது கண்ணைத்திற.


நல்லவனாய் நானிருந்து............


கட்டழகுப் பெண்பதுமை கடைவீதி வலம்வந்தால் 
தொட்டவளைப்பேசிடவே தூண்டல் வரும் - அப்பிடியோ
என்வீட்டாள் இதைக்கேட்டால் என்னாகும்? உடனடியாய்க்
கொன்றிடுவாள் என்னைக் கொளுத்தி!

ஆரோடும் கதைச்சான் அதைச்சொன்னான் இதைச்சொன்னான்
தேரோடும் வீதியிலும் திரிஞ்சான் -கூறோணும்
கேட்டவளோ வறுப்பாள் கீழ்நெருப் பெரியவைத்து
காட்டுங்கடா என்மேல் கருணை!

ஆருக்கும் தெரியாமல் அன்றைக்கு நாம்பார்த்த
கோதாரி சகிலாவின் குறையுடுப்பை – போய்நாறி
இந்தக் கதையெல்லாம் இவளுக்குச் சொன்னாயேல்
கந்தகம் புகையும் கறுப்பு!

சத்தம்போட்டு அழுது சண்டை பிடித்தாளேல்
மெத்தவும் நான் மகிழ்ந்து மீண்டிடுவேன் - அதைவிடுத்து
முத்த நிறுத்தம் முறுவல் தவிர்ப்பென்றால்
செத்திடுவேன், வையும் சிலை!

21.01.2009

புத்தாண்டு எதிர்பார்ப்பு

கனவுகள் எப்போது பலிக்கும் - உன்
கருணையின் மணியெப்ப ஒலிக்கும்
விடிவுகள் எப்போது கிடைக்கும் - அதன்
விளைவுகள் எப்போது நடக்கும்?

அழுகைகள் எப்போது அடங்கும்? - உன்
அருளது எப்போது தொடங்கும்?
தொழுகையின் பலனது கிடைக்கும் - உன்
தொலைவுகள் எப்போது நெருங்கும்?

அமைதிக்கு எங்கேதான் இடமோ- தமிழ்
ஆட்களின் மேலென்ன விசமோ?
சிலைவைத்து வணங்குதல் பிழையோ- நீ
சிறையெனும் செய்தியை அறியோம்!!!

ஆண்டவா கண்திறந்தாடு- இல்லை
ஆள்பவர் பேயெனச் சாடு
வேண்டினால் வேண்டுதல் தருவாய்- தமிழை
விரும்புவாய் காத்திடு குருவாய்!!!

14.04.2009